வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள்: முதல் அமைச்சர் உத்தரவு
|சான்றிதழ்களை கட்டணமின்றி பொதுமக்களுக்கு வழங்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும், 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் இந்த மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. மழை விட்டு 5 நாட்கள் ஆகியும் இன்னும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வடிந்த பாடில்லை.
ஒருசில பகுதிகளில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்தது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்களின் சான்றிதழ்கள் போன்றவை மழைநீரில் சேதமடைந்தன. மேலும், வீட்டில் இருந்த முக்கிய சான்றிதழ்களும் சேதமடைந்தன.
இந்த நிலையில், வெள்ள பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ்களை கட்டணமின்றி பொதுமக்களுக்கு வழங்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வருகிற11-ம் தேதியிலும், சென்னையில் வருகிற 12-ம் தேதியிலும் மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.