< Back
மாநில செய்திகள்
மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள்

தினத்தந்தி
|
16 July 2023 12:15 AM IST

குமரி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மகளிர் உரிமை தொகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முக்கிய திட்டமான மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது தொடர்பாக குமரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு 2 கட்டமாக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் உள்ள 764 ரேஷன் கடைகளில் மொத்தம் 5 லட்சத்து 77 ஆயிரத்து 138 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். ரேஷன் கடைகள் கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்பட்டு 764 முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த முகாமானது முதற்கட்டமாக 24-ந் தேதி முதல் 4-8-2023 வரை நடக்கும். 2-ம் கட்டமாக 5-8-2023 முதல் 16-8-2023 வரை நடைபெறும். முதற்கட்டத்தில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 215 முகாம்களிலும், தோவாளை தாலுகாவில் 59 முகாம்களிலும், கல்குளம் தாலுகாவில் 126 முகாம்களிலும் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெறவுள்ளது. மீதமுள்ள 364 முகாம்களுக்கான விண்ணப்ப பதிவு 2-வது கட்டமாக கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஆகிய தாலுகாவில் நடைபெறும்.

கட்டுப்பாட்டு அறை

2-ம் கட்ட முகாம்களின் கண்காணிப்பு பணியில் 153 மண்டல அலுவலர்கள், 51 மேற்பார்வை அலுவலர்கள், தாலுகா வாரியாக ஒரு மாவட்ட நிலை மேற்பார்வை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு முகாமிற்கும் கிராம நிர்வாக அலுவலர் நிலையில் 1 முகாம் அலுவலர் என 764 முகாம் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் இதுகுறித்து தகவல் தெரிந்துகொள்ள மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை ஒன்று இயங்கி வருகிறது. அதற்கான எண் 1077 மற்றும் 04652-231077 ஆகும். பொதுமக்கள் முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்