சென்னை
சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்-நீக்குதல் சிறப்பு முகாம் - இன்று நடைபெறுகிறது
|சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்-நீக்குதல் சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் 1.1.2023 தினத்தை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2023-ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.23 அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (1.1.2005 தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் 17 வயது நிரம்பி அடுத்த ஆண்டு 30.9.2023 வரை 18 வயது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளவர்களும்) படிவம் 6-ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் வழங்கலாம்.
இதன்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள வாக்குச்சாவடி மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வருகிற 26 மற்றும் 27-ந்தேதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம் நாட்களையும், படிவங்கள் 6, 6A, 7 மற்றும் 8-ஐ வழங்க பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம் 6B-ஐ பூர்த்தி செய்து இந்த சிறப்பு முகாம்களில் வழங்கலாம். www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்களை சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.