தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
|தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு ஜனவரி 20-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சென்னை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை வரும் 17-ந் தேதி(நாளை) தொடங்குகிறது. சபரிமலை அய்யப்பனை தரிசன செய்ய தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம். அவர்களின் வசதி கருதி சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் ஜனவரி 20-ந்தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணம் செய்யும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்ட் ஆப் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.