< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளிக்கு நிலத்தை தானமளித்த ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது: முதல்- அமைச்சர் அறிவிப்பு
மாநில செய்திகள்

அரசு பள்ளிக்கு நிலத்தை தானமளித்த ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது: முதல்- அமைச்சர் அறிவிப்பு

தினத்தந்தி
|
14 Jan 2024 1:36 PM IST

மதுரையில் அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை ஆயி அம்மாள் என்பவர் தானமாக வழங்கியுள்ளார்.

சென்னை,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆயி அம்மாள் . இவர் கனரா வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். ஆயி அம்மாளின் மகள் ஜனனி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய நினைவாக கொடிகுளத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதற்கு தானமாக ஆயி அம்மாள் நிலம் வழங்கினார்.

ரூ.4 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய அவரின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசு பள்ளிக்கு நிலத்தை தானமளித்த ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது;

"கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள்.

ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதல்-அமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்