< Back
மாநில செய்திகள்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும்; அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை
மாநில செய்திகள்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும்; அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை

தினத்தந்தி
|
4 Aug 2023 5:51 AM IST

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆய்வுகூட்டம்

நெடுஞ்சாலைத்துறையின் மாநில அளவில் அனைத்து அலகுகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து 3 மற்றும் 4-ந்தேதிகளில் (நேற்றும் இன்றும்) ஆய்வுகூட்டம் நடைபெறுகிறது. முதல் நாள் ஆய்வுகூட்டத்தை தொடக்கி வைத்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த மார்ச் மாத கணக்கின்படி வாகனங்களின் எண்ணிக்கை 3.25 கோடியாக உள்ளது. கற்பனைக்கு எட்டாத அளவில் வாகன வளர்ச்சி உள்ளது. இதற்கு ஏற்றவாறு தமிழகத்தின் சாலைகளை பராமரிக்கப்பட வேண்டும். மூலதன ஒதுக்கீட்டின் கீழ் 40 சதவீதம் தொகையான ரூ.17 ஆயிரத்து 435 கோடி நிதியை நெடுஞ்சாலைத் துறைக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதே அரசின் குறிக்கோள்.

முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட 64 நான்கு வழி சாலை பணிகளில் 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 55 பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும். 6 முத்திரை பணிகள் விரிவாக ஆய்வு செய்து விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

சாலைகளின் தாங்கும் திறன்

சிப்காட், டாட்டா, ஓலா போன்ற பல்வேறு தொழில்துறை சம்பந்தமான 9 வைப்பு நிதி பணிகளை சிறப்பு கவனம் செலுத்தி, ஆய்வு செய்து விரைந்து முடிக்க வேண்டும். நீண்ட நாள் முடிக்கப்படாமல் உள்ள பணிகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும். விரிவான திட்ட அறிக்கை நிலையில் உள்ள 12 பணிகள் மற்றும் நில எடுப்பு நிலையில் உள்ள 28 பணிகள் என 40 பணிகளை தனி கவனம் செலுத்தி செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். அனைத்து விபத்து கரும்புள்ளி பகுதி பணிகளிலும், மேலும் விபத்து நடைபெறாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் சாலைகளில் கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சுமை ஏற்றிச்செல்வதால், சாலைகளின் தாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது. சாலைகளில் போக்குவரத்து தரவுகளை கணக்கில் கொண்டு, சாலைகள் பழுதாவதை தவிர்க்க வேண்டும்.

கலைஞர் நூற்றாண்டு

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 100 இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், 100 பாலங்கள் கட்டுதல், 100 பாலங்கள் புனரமைத்தல், 100 இடங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் போன்ற பணிகளுக்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும். நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைதள செய்திகளில் குறிப்பிட்ட சாலைகள் மற்றும் பாலங்கள் குறித்த செய்தி வெளியாகும்போது, அதுகுறித்து உடனடியாக சீர் செய்து, தலைமை பொறியாளர்களுக்கும், அரசு கூடுதல் தலைமை செயலாளருக்கும் விரிவான அறிக்கையை அனுப்ப வேண்டும்.

சாலை பராமரிப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். மரங்களுக்கு வண்ணம் பூசுதல், பாலங்கள், சிறுபாலங்களை சீரமைத்தல், சாலை பாதுகாப்பு போன்ற பணிகளை அவ்வப்போது செய்யப்பட வேண்டும். எனது கள ஆய்வின் போதும் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வின் போதும், பணியில் சுணக்கம் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிறப்பு கவனம்

சிறு பாலங்கள், குழாய் பாலங்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி நீர்வழி பாதைகளில் உள்ள அடைப்புகளை அகற்றி பராமரிக்க வேண்டும். பாலங்களை வெள்ளை அடித்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பாலங்கள் பராமரிப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் கூடுதல் தலைமைச்செயலாளர் பிரதீப் யாதவ், திட்ட இயக்குனர் எஸ்.பிரபாகர், நெடுஞ்சாலைத்துறையின் தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், கோட்ட பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்