சென்னை மெட்ரோ ரெயில்களில் பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடு
|‘பிங்க் ஸ்குவாட்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள பெண்கள் கராத்தே தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் 'பிங்க் ஸ்குவாட்' (Pink Squad) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் மெட்ரோ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சித்திக் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பெண் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக 'பிங்க் ஸ்குவாட்' அமைப்பில் 23 பெண்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் கராத்தே தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணியில் இவர்கள் ஈடுபட உள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 12 ஆயிரம் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பெண்களின் பாதுகாப்புக்காக இந்த 'பிங்க் ஸ்குவாட்' உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேவையற்ற அரட்டை, பேச்சுக்கள் குறித்தும் 'பிங்க் ஸ்குவாட்' அமைப்பிடம் பெண் பயணிகள் புகார் அளிக்கலாம் எனவும், மகளிருக்காக பிரத்யேக தொடர்பு எண் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சி.எம்.ஆர்.எல். உதவி எண் 1860 425 1515-ஐ தொடர்பு கொண்டாலும் 'பிங்க் ஸ்குவாட்' மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.