விழுப்புரம்
ஆதாருடன் செல்போன் எண் இணைக்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு
|விழுப்புரம் மாவட்டத்தில் ஆதாருடன் செல்போன் எண் இணைக்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் தெரிவித்துள்ளார்
விழுப்புரம்
புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆதாருடன் செல்போன் எண் இணைப்பு
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், தங்களுடைய ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் விவசாய பயனாளிகள் உள்ளனர் என தெரியவந்துள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், பிரதம மந்திரியின் கிசான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை இணைப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கோட்டத்தின் கீழ் இயங்கும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தலைமை தபால் நிலையங்கள், துணை தபால் நிலையங்கள், கிளை தபால் நிலையங்களில் பணிபுரியும் தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்களை அணுகி தங்கள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை உடனடியாக இணைத்து பயன்பெறலாம்.
சிறப்பு முகாம்கள்
இந்த சேவைக்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்த பிறகு பிரதம மந்திரியின் கிசான் இணையதளம் அல்லது செயலியில் ஆதார் எண்ணுடன் வரும் ஓடிபி அங்கீகாரத்தை பயன்படுத்தி கே.ஒய்.சி. செய்துகொள்ளலாம். மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் புதுச்சேரி அஞ்சல் கோட்டமும், இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியும் இணைந்து கிராமங்களில் நடத்தும் சிறப்பு முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.