திருநெல்வேலி
'வனப்பகுதிகளை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை'- வனத்துறை அதிகாரி முருகன் பேட்டி
|‘நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வனப்பகுதிகளை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று வனத்துறை அதிகாரி முருகன் கூறினார்.
மாநாடு
சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதன் முறையாக மாவட்ட வன அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது வனப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட வனத்துறை சார்பில் மாவட்ட வன அலுவலர் முருகன், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் மாரிமுத்து, அம்பை துணை இயக்குனர் செண்பகபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரி முருகன் கூறியதாவது:-
அணைக்கட்டுகள்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வனத்துறையின் பங்களிப்பு மிக முக்கியமானது. குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு மிக முக்கிய ஆதாரமாக விளங்குவது பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகள் ஆகும். இவை மேற்கு தொடர்ச்சி மலையின் உள்ளேயும், அடிவாரத்திலும் கட்டப்பட்டு உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையின் உள்ளே காப்பு காடுகள் எனப்படும் அடர் வனப்பகுதிகளும், வெளியே சில வனப்பகுதிகளும் அமைந்துள்ளன. வனப்பகுதிகளை பாதுகாத்தால் மட்டுமே குடிநீர் வசதி சிறப்பாக இருக்கும்.
பாதுகாக்க நடவடிக்கை
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆகியோர் வனப்பகுதிகளை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்குமாறு கூறிஉள்ளனர். அதன்படி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் வனப்பகுதிகளை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வனத்தை பாதுகாத்தால் நாடு செழிப்படையும்.
மேற்கு தொடர்ச்சி மலை நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும். இங்கு களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது. மேலும் யானைகள் காப்பகமும் விரைவில் செயல்பட தொடங்குகிறது.
மரக்கன்றுகள்
தமிழ்நாட்டில் 23 சதவீதம் காடுகள் அமைந்திருக்கிறது. இதை 33 சதவீதம் ஆக்குவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக இந்த ஆண்டு 2 லட்சம் மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. அதில் வருகிற வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியதும் 1.40 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். இதே போல் சமூக காடுகள் திட்டத்தின் கீழ் 5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.
சரணாலயங்கள்
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தவிர, கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம், திருப்புடைமருதூர் பறவைகள் காப்பகம் ஆகியவையும் அமைந்துள்ளன. இதில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி பறவைகள் வாழ்விட வசதிகள் மேம்பாடு மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.
இதேபோல் கங்கைகொண்டான் புள்ளிமான்கள் சரணாலயத்தையும் மேம்படுத்த தனியார் நிறுவன பங்களிப்புடன் விரைவில் பணிகள் தொடங்கும்.
மேலும் கடையம் அருகே வாகைகுளம் பறவைகள் பல்லுயிர் செழுமையான பகுதியாக அறிவிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
அலையாத்தி காடுகள்
நெல்லை மாவட்டத்தில் 48 கிலோ மீட்டர் தூரத்தில் 8 கடலோர கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் கூடங்குளம் அணுவிஜய் நகரியம் பகுதியில் அலையாத்தி காடுகள் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அது பெரிய வெற்றியை தரவில்லை. நதிகள் கடலுடன் சேரும் பகுதியில்தான் அலையாத்தி காடுகள் சிறப்பாக வளர்ச்சி அடையும். இருந்த போதும் நெல்லை மாவட்டத்தில் கடலோர பகுதியில் அலையாத்தி காடுகளை உருவாக்க ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
வனவிலங்குகள்
வனவிலங்குகள் வேட்டை பெருமளவு தடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக இரவு ரோந்து அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதனால் யானை, புலி, புள்ளிமான், மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. யானைகள் ஊருக்குள் புகுந்து விடாமல் இருக்க மலை அடிவார பகுதிகளில் யானை புகா குழிகள் தோண்டப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் இந்த குழிகள் சீரமைக்கப்படுகிறது. இதுதவிர யானைகள் தொட்டால் அதிர்வை ஏற்படுத்தும் சூரிய ஒளி மின் வேலி அமைக்கப்படுகிறது. கிராம வனக்குழுக்கள் அமைக்கப்பட்டு வனத்துறை தேவையான உதவிகள் செய்து வருகிறது. இதன் மூலம் வனத்துறை மற்றும் கிராம வனக்குழுவினர் இணைந்து காடுகள் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.