< Back
மாநில செய்திகள்
கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
அரியலூர்
மாநில செய்திகள்

கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
5 Nov 2022 7:03 PM GMT

கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலின் அருகே உள்ள கணக்க விநாயகர் கோவில் ஆகியவை மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது ஆகும். அக்காலத்தில் ராஜேந்திர சோழன் அரண்மனையை விட்டு வெளியே சென்று திரும்பி வரும் சமயங்களில், கணக்க விநாயகரை தரிசனம் செய்த பின்னரே அரண்மனைக்கு செல்வது வழக்கம் என்று வரலாறு கூறுகிறது. மேலும் இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலை, லேசான பச்சை நிற கிரானைட் கல் போன்ற கல்லால் செய்யப்பட்டது ஆகும். இதனால் அபிஷேகம் செய்யப்படும்போது, விநாயகர் சிலை லேசான பச்சை நிறமாக காட்சியளிப்பதும், பின்னர் சிறிது நேரத்தில் பழைய நிலைக்கு திரும்புவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரகதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் நடைபெறுவதும், இதை முன்னிட்டு முதல் அபிஷேகம் கணக்க விநாயகருக்கு செய்யப்படுவதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அன்னாபிஷேகம் நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நேற்று கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் யாகம் வளர்க்கப்பட்டு, விநாயகருக்கு கங்கை நீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு ருத்ரஹோமம், மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது. இதற்கிடையே அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பிரகதீஸ்வரர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

மேலும் செய்திகள்