திருநெல்வேலி
காமராஜர் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மரியாதை
|திசையன்விளையில் காமராஜர் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திசையன்விளை:
திசையன்விளையில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது. இதையொட்டி அங்குள்ள அவரது சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் உடன் இருந்தார்.
முன்னதாக திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராதாபுரம் தொகுதியில் உள்ள ஆரம்ப நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் தொண்டுநிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட நிதி மூலம் 295 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அங்குள்ள எல்.இ.டி. தொலைகாட்சி பெட்டியில் வெப் கேமரா பொருத்தப்பட்டு, அதோடு மின்தடை ஏற்பட்டால் தொடர்சியாக வகுப்பு நடைபெறும் வகையில் யு.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு அனைத்து பள்ளிகளையும் வட்டார கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் மனோ கல்லூரிகளுக்கும் இணைப்பு கொடுத்து ஒருங்கிணைக்கப்பட உள்ளது. ராதாபுரம் தொகுதியில் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கவிழா திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
ஒருங்கிணைந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார் திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விழாவில் நான் (சபாநாயகர் அப்பாவு), பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.