சபாநாயகர் அப்பாவு இன்று நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
|அதிமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு இன்று நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கடந்த அதிமுக ஆட்சியின் போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் திமுகவிற்கு வர தயாராக இருந்ததாகவும் ஆனால் மு.க.ஸ்டாலின் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவை சேர்ந்த பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். சென்னை ஐகோர்ட்டு, வழக்கு தொடர அனுமதி அளித்ததையடுத்து, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கை பாபு முருகவேல் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று காலை நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். சபாநாயகர் அப்பாவு இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜராவாரா அல்லது கூடுதல் அவகாசம் கேட்கப்படுமா? என்பது குறித்து வழக்கு விசாரணைக்கு வரும் போதுதான் தெரிய வரும்.