வெள்ளத்தில் மிதக்கும் தென் மாவட்டங்கள்.. நெல்லை விரைகிறார் அமைச்சர் உதயநிதி...!
|மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93 செமீ அளவு மழை பதிவாகியிருக்கிறது. ஓர் ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மழை பாதித்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக நெல்லை விரைந்துள்ளார்.