தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி
|4 மாவட்டங்களுக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின் மாவட்ட கலெக்டர்கள் அனைவருக்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து கண்காணிப்பு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஊட்டி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சேதமடையும் பயிர்களை உடனடியாக கணக்கீடு செய்து, அந்த பயிர்களுக்கான நஷ்ட ஈடு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் மின்தடை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.