தேனி
'யூ-டியூப்பர்ஸ்' 2 பேர் மீது தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் புகார்
|யூ-டியூப்பர்ஸ் 2 பேர் மீது தென் இநதிய பார்வர்டு பிளாக் கட்சியினர் புகார் கொடுத்தனர்.
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ் தலைமையில், மாவட்ட பொதுச்செயலாளர்கள் தெய்வம், பாண்டியராஜன், மாவட்ட தலைவர் ஜீவா, நகர தலைவர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அங்கு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தத்திடம் அவர்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அதில், 'மார்ஸ் தமிழ்நாடு என்ற இணையதளத்தில் யூ-டியூப்பர்ஸ் மதன் மற்றும் நவீன் சுப்பிரமணியன் என்ற இருநபர்களும் வீடியோவை வெளியிட்டனர். அதில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் பற்றி அவதூறான தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளனர். உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டதால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.