< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

தினத்தந்தி
|
21 Feb 2024 3:58 PM IST

திரைப்பட நகரத்திற்கு நிதி ஒதுக்கிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு பட்ஜெட்டில் திரைப்பட நகரத்திற்கு நிதி ஒதுக்கிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள தமிழ் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டிய பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ்., அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாக, பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாக திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரிய செய்கின்ற திட்டமிது. தமிழ் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்