தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து வாரி வழங்குகிறது - சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
|அனைத்துத்துறைகளிலும் தமிழ்நாடு வளர்ந்து வருவதை பார்த்து எதிரிகளுக்கு பொறாமையும், கோபமும் வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையை பாதியிலேயே புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நடைபெற்ற 2-வது நாள் அமர்வில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இந்த சூழலில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபையில் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ஒரே நாடு-ஒரே தேர்தல் தொடர்பாக 2 அரசினர் தனித்தீர்மானங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து பேசினார். இதைத்தொடர்ந்து அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்களும் தீர்மானத்தின் கீழ் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். 2 தனித்தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் வைத்த விவாதத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார்.
இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று ஆட்சி செய்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே நான் ஆட்சி நடத்தி வருகிறேன்
தமிழ்நாட்டு மக்களுக்காக ஒவ்வொரு நாளும் சிந்தித்து செயல்படுகிறேன். அரசின் உரையை அப்படியே வாசிக்க வேண்டியது கவர்னரின் கடமை. கவர்னர் தனது அரசியலுக்காக சட்டசபையை பயன்படுத்திக் கொண்டார். சிறு பிள்ளை விளையாட்டுகளை கண்டு பயந்துவிட மாட்டோம். கவர்னரின் செயல் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்.
புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். எவர்வரினும் நில்லேன். அஞ்சேன் என்பதுதான் இவர்களுக்கு எனது பதில். மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நமது வளர்ச்சியை பார்த்து இன எதிரிகளுக்கு கோபம் வருவதே சாதனை.
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று சொல்வதுண்டு. இன்று தெற்கு வளர்கிறது; வடக்கிற்கும் சேர்த்து வாரி வழங்குகிறது. முதல்-அமைச்சர் பொறுப்புக்கு வந்து 33 மாதங்கள் ஆகிறது. இவை அனைத்தும் சாதனை முன்னேற்ற மாதங்கள். ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணம்.
அனைத்துத்துறைகளிலும் தமிழ்நாடு வளர்ந்து வருவதை பார்த்து நம் எதிரிகளுக்கு பொறாமையும், கோபமும் வருகிறது. நான் முதல்வன் திட்டத்தில், 2 ஆண்டுகளில் 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
ஜி.எஸ்.டி. வரி முறையால் தமிழ்நாட்டிற்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த போது, பேசாத எதிர்க்கட்சித்தலைவர் இப்போது குரல் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று அவர் கூறினார்.