தூத்துக்குடி
வீரபாண்டி கட்டபொம்மன் சுற்றுலா மையத்தில் ஒலி, ஒளி காட்சி அமைக்கப்படும்-
|வீரபாண்டி கட்டபொம்மன் சுற்றுலா மையத்தில் ஒலி, ஒளி காட்சி அமைக்கப்படும்- கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் 75- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலாதேவி தலைமை தாங்கினார். திட்ட அறிக்கையை ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து 2022-23 ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் ஒலி, ஒளி காட்சி அமைக்கப்படும். இங்கு குடிநீர் உட்பட அனைத்து வசதிகளும் ஓராண்டுக்குள் நிறைவேற்றித் தரப்படும், என்றார்.
10 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
மாவட்ட கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் வீரபுத்திரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ராஜன், வேளா ண்மை உதவி இயக்குனர் முகைதீன், துணை இயக்குனர் எஸ்.ஜே.எஸ்.எல்.பின் இன்பராஜ், ஊராட்சி உதவி இயக்குனர் உலகநாதன், சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்ட செயற்பொறியாளர் செந்தூர்பாண்டியன், தாசில்தார் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், மண்டல துணை தாசில்தார் ஆனந்த், தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி, யூனியன் ஆணையாளர் வெங்கடாச்சலம், வீரபாண்டி கட்டபொம்மன் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீர பாண்டிய சுப்ரமணிய கட்டபொம்மன் துரை உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் யூனியன் கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.
முன்னதாக பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் உள்ள வீரபாண்டி கட்டபொம்மன் உருவச்சிலைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் சரவணன் பஞ்சாயத்து தலைவர் கமலாதேவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வேளாண்மை பொறியியல் துறை, விவசாயத்துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை ஆகிய கண்காட்சிகளை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.