'நடிகர் மயில்சாமி மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன்' - முதல்-அமைச்சர் இரங்கல்
|நடிகர் மயில்சாமியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழந்தார். மயில்சாமியின் திடீர் மறைவு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயில்சாமியின் மறைவுக்கு திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நடிகர் மயில்சாமி மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் மயில்சாமி, தனது ஒலிநாடாக்கள் மூலம் அறிமுகமானவர்.
காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்பட்டவர். திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகர் மயில்சாமியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.