விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
|கடந்த 3 ஆண்டுகளில் 2 முறை தமிழக அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது.
சென்னை,
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவை மாற்றத்தின்போது புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து அமைச்சரவை மாற்றமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சேலம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. வரும் 23-ந்தேதி தமிழக அமைச்சரவை மாற்றப்படலாம் என்றும் ஏற்கனவே அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஏற்கனவே 2 முறை அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக இந்த அமைச்சரவை மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அவரை துணை முதல்-அமைச்சர் ஆக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.