புதுக்கோட்டை
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனை தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போன் பறிப்பு
|விராலிமலை அருகே முகவரி கேட்பது போல் நடித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனை இரும்பு கம்பியால் தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போனை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
முகவரி கேட்பது போல் நடித்து...
விராலிமலை முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கணேசன் மகன் சண்முகசுந்தரம் (வயது 35). இவர் நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் விராலிமலை அருகே விராலூரில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விராலிமலை வரும் வழியில் விராலூர் பஸ் நிறுத்தம் அருகே சிறுநீர் கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம ஆசாமிகள் சண்முகசுந்தரத்திடம் முகவரி கேட்பது போல் நடித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சண்முகசுந்தரத்தை தாக்கியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள், செல்போன் பறிப்பு
இதில் நிலைக்குலைந்த அவர் சுதாரிப்பதற்குள் அவரின் சட்டைப்பையில் இருந்த ரூ.4 ஆயிரத்து 500, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் சண்முகசுந்தரத்தை மீட்டு விராலிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனை இரும்பு கம்பியால் தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போனை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.