சொத்துக்காக கண்மூடித்தனமாக தந்தையை தாக்கிய மகன் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி
|சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிசி ஆலை உரிமையாளர் குழந்தைவேலு. அவருக்கும் அவரது மகன் சக்திவேலுக்கும் இடையே சொத்து தகராறில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், சோபாவில் அமர்ந்திருந்த தனது தந்தையை கொலைசெய்யும் நோக்கில் தாக்கியுள்ளார்.
இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், குழந்தைவேலுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய குழந்தைவேலு கடந்த 18-ம் தேதி மது அருந்தி விட்டு உறங்கச் சென்றுள்ளார். இந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் குழந்தைவேலு தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதியவர் மாரடைப்பால்தான் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சிசிடிவி காட்சியை வைத்து விசாரித்து வந்த போலீசார், ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.