சென்னை
மடிப்பாக்கத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் - மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்
|மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்திக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 56). இவர், சென்னையை அடுத்த மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, வேலை செய்து வந்தார்.
இவருடைய மகள் விஜயலட்சுமி. இவர், தன்னுடைய கணவர் ஏழுமலை மற்றும் குழந்தைகளுடன் புழுதிவாக்கம் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தார்.
விஜயலட்சுமிக்கும், அவருடைய கணவர் ஏழுமலைக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடந்த விஜயலட்சுமி, கடந்த 12-ந் தேதி தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரான செஞ்சிக்கு சென்றுவிட்டார்.
தனது மனைவி பிரிந்து சென்றதற்கு மாமியார் முனியம்மாள்தான் காரணம் என்று கருதிய ஏழுமலை, மறுநாள் 13-ந் தேதி மடிப்பாக்கத்துக்கு சென்று முனியம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் முனியம்மாளை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த முனியம்மாள், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை முனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மடிப்பாக்கம் போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.