ஈரோடு
தாளவாடி அருகே மருமகனை அரிவாளால் வெட்டியமாமனார், மாமியார் உள்பட 3 பேர் கைது
|தாளவாடி அருகே மருமகனை அரிவாளால் வெட்டிய மாமனார், மாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாளவாடி
தாளவாடி அருகே மருமகனை அரிவாளால் வெட்டிய மாமனார், மாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காதல் திருமணம்
தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்கார்த்திக் (வயது 29). இவர் கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். விக்னேஷ்கார்த்திக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (45), துளசியம்மா(37) தம்பதியரின் மகள் ஜோதி என்பவரும் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது காதல் திருமணத்தை ஜோதியின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் விக்னேஷ்கார்த்திக்கின் வீட்டில் அவரும், ஜோதியும் இருந்துள்ளனர். அதன்பின்னர் விக்னேஷ்கார்த்திக் கேரளாவுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
அரிவாள் வெட்டு
சம்பவத்தன்று கேரளாவில் இருந்து விக்னேஷ்கார்த்திக் ஊருக்கு வந்திருந்தார். இதை அறிந்த அவருடைய மாமனார் பால்ராஜ், மாமியார் துளசியம்மா, 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் விக்னேஷ்கார்த்திக்கின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் அவரது முகத்தில் துளசியம்மா மிளகாய் பொடியை தூவி உள்ளார். பின்னர் பால்ராஜ் தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் விக்னேஷ்கார்த்திக்கை சரமாரியாக வெட்டியுள்ளார். அதன்பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
படுகாயம் அடைந்த விக்னேஷ்கார்த்திக் கர்நாடக மாநிலம் மைசூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
3 பேர் கைது
மேலும் பால்ராஜ், துளசியம்மா, சிறுவன் ஆகியோரை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடிவந்தனர். கர்நாடக மாநிலத்துக்கு தப்பி சென்றிருக்கலாம் என கருதி அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை 3 பேரும் தாளவாடி அருகே உள்ள தர்மாபுரம் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு வந்திருப்பதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.