சோளிங்கர்: மினி திரையரங்கில் தீ விபத்து - 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
|சோளிங்கர் அருகே மினி திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
சோளிங்கர்,
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே திரையரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த திரையரங்கில் இரண்டு திரையரங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு மினி திரையரங்கில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி திரையரங்கு முழுவதும் பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த சோளிங்கர் தீயணைப்பு துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். ஆனால் தீ மேலும் பரவியதால் பின்னர் அரக்கோணத்தில் இருந்த தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு இரண்டு தீயணைப்பு வாகனங்களைச் சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட வீரர்கள் வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதல் கட்ட விசாரணையில் ஏசியால் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக திரையரங்கு தீ விபத்து உள்ளானது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் திரையரங்கம் முழுவதுமாக எரிந்து சேதம் ஆனது. இதன் மதிப்பு சுமார் 25 லட்சத்திற்கு மேல் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது குறித்து சோளிங்கர் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.