ராணிப்பேட்டை
சோளிங்கர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்
|ஊராட்சி பணத்தை கையாடல் செய்ததாக சோளிங்கர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஊராட்சி பணத்தை கையாடல் செய்ததாக சோளிங்கர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணம் கையாடல்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. குருவவராஜ்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப்பணிகளின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்துவந்தார். ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் திட்டப் பணிக்காக ஊராட்சி நிர்வாகத்தில் பணம் வைத்திருப்பதை அறிந்த இவர் சில ஊராட்சிகளில், ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமலேயே அந்த பணத்தை போலி ஆவணங்கள் மூலம் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
பணியிடை நீக்கம்
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலி ஆவணங்கள் மூலம் பணம் இருப்பு வைத்திருந்த சில ஊராட்சிகளில் இருந்து லட்சக்கணக்கான பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பணம் கையாடல் செய்ததாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயனை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.