< Back
மாநில செய்திகள்
ஜல்லிக்கட்டில் காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்கள்
திருச்சி
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டில் காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்கள்

தினத்தந்தி
|
20 Jan 2023 1:37 AM IST

ஜல்லிக்கட்டின் காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்கினர்.

திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் அருகே நவலூர்குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள அறவாயி அம்மன், குன்னி மரத்தான், அடைக்கல அன்னை ஆலயம் மற்றும் காவல் தெய்வங்கள் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த சில நாட்களாக அடைக்கல அன்னை ஆலயத்தின் முன்பு ஜல்லிக்கட்டு மைதானத்தை தயார் செய்தல், மைதானத்துக்கு இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைத்தல், மேடை மற்றும் வாடிவாசல் அமைத்தல், போட்டியில் பங்கேற்பவர்களுக்கு டோக்கன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் அடைக்கல அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும், அறவாணி அம்மன், குன்னி மரத்தான் கோவில்களில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டு, அங்கிருந்து கோவில் காளைகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் திடலுக்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. காலை 8.45 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது.

சீறிப்பாய்ந்த காளைகள்

முதல்கட்டமாக 25 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். தொடக்கத்தில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகளை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபிறகு, ஒவ்வொரு காளையாக டோக்கன் வரிசைப்படி வாடிவாசல் வழியாக அனுப்பப்பட்டன. மேடையில் அமர்ந்து இருந்த நபர் மைக் மூலம் வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்து வர தயாராக இருக்கும் காளை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?, காளையின் உரிமையாளர் யார்?, அதை அடக்குபவர்களுக்கு பரிசு என்ன? என்பன போன்ற விவரத்தை அறிவித்து கொண்டே இருந்தார். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர்.

அடக்கிய வீரர்கள்

அப்போது பல காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றன. சில காளைகள் களத்தில் நின்று சுழன்று சுழன்று மாடுபிடி வீரர்களை கொம்பால் முட்டி பந்தாடின. அதைப் பார்த்த வீரர்கள் உயிருக்கு பயந்து பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டை மீது ஏறினர். சில காளைகள் வாடிவாசலில் இருந்து வெளியேறி சிறிது தூரம் சென்றபின் மீண்டும் வாடிவாசலை நோக்கி வந்து களத்தில் நின்று விளையாடின.

அதைப்பார்த்த பார்வையாளர்கள் கை தட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். பல காளைகளை வீரர்கள் அடக்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு தங்கக்காசு, வெள்ளிக்காசு, சைக்கிள், பீரோ, கட்டில், டிரசிங் டேபிள், மிக்சி, கிரைண்டர், ஹோம்தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் வீரர்கள் அனைவருக்கும் தென்னங்கன்று வழங்கப்பட்டது.

17 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் கொம்பால் குத்தியதில் மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 17 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மைதானத்துக்கு வெளியே ஒரு கட்டிடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இதில் பலத்த காயம் அடைந்த திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த எபி (வயது 21), திருவெறும்பூரை சேர்ந்த சசிகுமார் (25), சன்னாசிப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் லோகநாதன் (45), சின்னசூரியூரை சேர்ந்த காளையின் உரிமையாளர் சுரேஷ்குமார் (24) ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 600 காளைகளும், 5 கட்டங்களாக 400-க்கும் மேற்பட்ட வீரர்களும் களம் இறக்கப்பட்டனர். மாலை 4.05 மணியளவில் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது.

மேலும் செய்திகள்