< Back
மாநில செய்திகள்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் உடலுக்கு ராணுவ மரியாதை
மாநில செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் உடலுக்கு ராணுவ மரியாதை

தினத்தந்தி
|
18 March 2023 10:44 AM IST

மேஜர் ஜெயந்தின் உடலுக்கு ௨௧ துப்பாக்கி குண்டுகள் முழங்க இந்திய ராணுவத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர்.

தேனி,

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாசல பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெயந்த் ஆகிய 2 ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சாரதா என்ற மனைவி உள்ளார். ஜெயந்தின் மறைவால் அவரது கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதனிடையே உயிரிழந்த லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டியின் உடல் ஐதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேஜர் ஜெயந்த்தின் உடல் விமானப்படை விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் கலெக்டர் அனீஷ் சேகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மேஜர் ஜெயந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்திற்கு மேஜர் ஜெயந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அவரது உடலின் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை, இந்திய ராணுவத்தினர் முறைப்படி அகற்றி, மேஜர் ஜெயந்தின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் மேஜர் ஜெயந்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்