< Back
மாநில செய்திகள்
ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில்பாதை அமைக்க மண் பரிசோதனை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில்பாதை அமைக்க மண் பரிசோதனை

தினத்தந்தி
|
14 Nov 2022 12:15 AM IST

ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை அமைக்க 2-வது கட்டமாக கடற்கரை பகுதியில் மண் பரிசோதனை பணி தீவிரமாக நடைபெற்றது.

ராமேசுவரம்,

ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை அமைக்க 2-வது கட்டமாக கடற்கரை பகுதியில் மண் பரிசோதனை பணி தீவிரமாக நடைபெற்றது.

புயலில் அழிந்த ரெயில்பாதை

ராமேசுவரம் அருகே புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதி உள்ளது. மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கி வந்த தனுஷ்கோடி நகரமானது கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலால் முழுமையாக அழிந்து போனது. 1964-ம் ஆண்டுக்கு முன்பு தனுஷ்கோடி வரை ரெயில் பாதை இருந்தது.

இந்த புயலில் தனுஷ்கோடி வரை இருந்த ரெயில் பாதையும் முழுமையாக கடலில் அடித்துச் செல்லப்பட்டு சேதம் அடைந்தது. அதன் பின்னர் தனுஷ்கோடி வரையிலான ரெயில் போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டது.

அதுபோல் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி வரையிலும் மீண்டும் ரெயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதுடன் முதல் கட்டமாக ரூ.128 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் ரெயில் பாதை அமைப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல் கட்டமாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் பரிசோதனை நடத்தப்பட்டது.

மண்பரிசோதனை

இந்த நிலையில் தனுஷ்கோடி வரை ரெயில் பாதை அமைப்பதற்காக 2-வது கட்டமாக ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே மண் பரிசோதனை பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக தனுஷ்கோடி கம்பிப்பாடு மற்றும் கோதண்டராமர் கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 30 மீட்டர் ஆழம் வரையிலும் எந்திரம் மூலம் துளையிடப்பட்டு மண்ணானது ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது:-

ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 18 மீட்டர் ஆழத்தில் தான் மண் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் கடலை ஒட்டிய பாதையில் ரெயில் பாதை அமைய உள்ளதால் அந்த தூண்கள் அதிக உறுதி தன்மையுடன் இருக்க வேண்டும். அதனால் தான் 2-வது கட்டமாக நடைபெறும் இந்த மண் பரிசோதனையானது சுமார் 30 லிருந்து 35 மீட்டர் ஆழம் வரையிலும் நடத்தப்பட்டு வருகிறது.

விரைவில் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளதால் ராமேசுவரத்தில் இருந்து ஜடா தீர்த்தம் வரையிலான இடைப்பட்ட பகுதியில் அதற்கான இடங்களை எடுப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்