அனைவருக்கும் சமமான வாய்ப்பளித்தால் சமுதாயம் முன்னேறும் - பிரதமர் மோடி
|சலுகைகள் உடைக்கப்பட்டால் சமத்துவம் பிறக்கும் என்றும், அனைவருக்கும் சமமான வாய்ப்பளித்தால் சமுதாயம் முன்னேறும் என்றும் சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
125-வது ஆண்டு விழா
ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடந்தது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 4.42 மணிக்கு வந்தார். விவேகானந்தர் இல்ல வளாகத்தில் உள்ள விவேகானந்தர் சிலைக்கு மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ராமகிருஷ்ணா மடம் சார்ந்த புத்தகம் ஒன்றை பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டார். விவேகானந்தர் தங்கியிருந்த அறையில் சுமார் 10 நிமிடம் பிரதமர் நரேந்திரமோடி அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.
தமிழை நேசிக்கிறேன்
விழாவில், மோடி பேசியதாவது:-
ராமகிருஷ்ணா மடத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏனென்றால் இந்த மடம் எனது வாழ்வில் முக்கிய பங்காற்றியுள்ளது. விவேகானந்தர் தியானம் செய்த இடத்துக்கு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மடம் 125-வது ஆண்டு விழாவை கொண்டாடுவது எனது மகிழ்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ் மொழி, தமிழக மக்கள், தமிழ் கலாசாரம், பண்பாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். தமிழகத்தில் கல்வி, நூலகம், புத்தக வங்கி, தொழுநோய் விழிப்புணர்வு, ஊரக வளர்ச்சி, சுகாதாரம் என பல தளங்களில் ராமகிருஷ்ணா மடம் சேவை செய்து வருகிறது. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை மிகவும் பிரபலமானது. விவேகானந்தர் அங்கு அமர்ந்துதான் தனது வாழ்வின் நோக்கம் என்ன என்பதை கண்டு பிடித்தார். கன்னியாகுமரியில் உள்ள பாறையில் தியானத்தில் இருந்தபோதுதான் அவரது உள்ளத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் தாக்கத்தை சிகாகோவில் அவர் ஆற்றிய உரையில் இருந்து உணருகிறோம்.
சமத்துவம் பிறக்கும்
விவேகானந்தர் வங்காளத்தை சேர்ந்தவர். ஆனாலும் தமிழகம் அவரை ஒரு கதாநாயகனை போல வரவேற்றது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நோக்கத்தில் தன்னலமற்ற முறையில் ராமகிருஷ்ணா மாடம் சேவையாற்றி வருகிறது. ஒரே பாரதம் என்பதை அண்மையில் காசி தமிழ் சங்கமத்தில் பார்த்தேன். இப்போது சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எங்களது அரசின் கொள்கைகள் விவேகானந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவையாகும். சலுகைகள் உடைக்கப்பட்டால் சமத்துவம் பிறக்கும். அனைவருக்கும் சமமான வாய்ப்பளிப்பதன் மூலம் சமுதாயம் முன்னேறும். கடந்த ஆட்சியில் (காங்கிரஸ்) ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூட அளிக்கப்படவில்லை.
இப்போது அனைவருக்கும் சமையல் எரிவாயு, கழிப்பறை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. பிரபலமான 'முத்ரா' திட்டம் 8-வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் ஏராளமான சிறு தொழில்முனைவோர்கள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தொலைநோக்கு பார்வை
விவேகானந்தருக்கு இந்தியா மீது ஒரு தொலைநோக்கு பார்வை இருந்தது. அவரது கொள்கைகளை இந்தியா நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. விவேகானந்தரின் தத்துவங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. கல்வியே ஒருவரை வலிமையுள்ளவராக மாற்றும் என்று அவர் நம்பினார்.
உயர் கல்வியும், அனைத்து விதமான தொழில்நுட்ப கல்வியும் நமக்கு கிடைக்கவேண்டும் என்று எண்ணினார். உலகிலேயே மிகச்சிறந்த தொழில்நுட்ப களம் இந்தியாவில் இருக்கிறது. உலக தரமான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய கல்விக்கொள்கை உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து விவேகானந்தர் தெரிவித்த கருத்துகள் இன்று இந்தியா முழுமைக்கும் மிகவும் பொருத்தமாக உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை கொண்டாடி வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு அமிர்தகாலமாகும்.
விவேகானந்தரின் ஆசி
5 முக்கிய கொள்கைகளால் நமது நாட்டை உயர்ந்த இடத்துக்கு கொண்டுவரவேண்டும். இந்தியாவை வளர்ச்சியடைய செய்வதற்கான இலக்கு, காலனிய மனப்பான்மையை நீக்குதல், நமது பாரம்பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை வலுப்படுத்துதல், கடமைகளில் கவனம் செலுத்தவேண்டும் உள்ளிட்டவற்றை வளர்க்க வேண்டியது அவசியம். இந்த 5 கொள்கைகளை நிறைவேற்ற நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் முடிவெடுத்தால் 2047-ம் ஆண்டு நம் நாடு தற்சார்புள்ள நாடாக முன்னேறும். இந்த தொலைநோக்கு பார்வை விவேகானந்தரின் ஆசியால் நனவாகும் என்று கருதுகிறேன்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
நினைவு பரிசு
சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் கவுதமானந்தா, பேளூர் ராமகிருஷ்ணா மடத்தின் அறங்காவலர் முக்தியானந்தா உள்பட மூத்த நிர்வாகிகள், மோடிக்கு விவேகானந்தர் சிலையை நினைவு பரிசாக வழங்கினர்.
மோடி விழாவுக்கு வரும்போதும், விழா நிறைவடைந்து சென்றபோதும் காமராஜர் சாலையில் இருபுறமும் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களை நோக்கி காரின் உள்ளே இருந்தவாறு மோடி கைகளை அசைத்தவாறு வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி, மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல சில மணி நேரம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. காமராஜர் சாலையிலும் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. மோடி விழாவில் பங்கேற்றுவிட்டு புறப்பட்டு சென்ற பின்னர் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.