"சமூக நீதி போராட்டங்கள் இன்னும் வலுவடைய வேண்டும்" - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
|சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, சமூக நீதிக்காகப் போராடி வருவோருக்கு மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"பொருளாதாரத்தில் பின்தங்கிய, முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, சமூக நீதிக்காகப் போராடி வருவோருக்கு மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளது. சமத்துவம், சமூக நீதிக்கான போராட்டங்கள் இன்னும் வலுவாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதை இந்த தீர்ப்பு உறுதிசெய்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறியப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை 2019-ல் மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது. அரசியல் சாசனத்தின் 103-வது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கே எதிரானது என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், மத்திய அரசு எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளவில்லை.
இதனால், பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. வறுமை என்பது அனைவருக்கும் சமமானது. அப்படி இருக்கையில், குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் வறுமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது நியாயமாகுமா? பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை குறிப்பிட்ட வகுப்பாக எப்படி வகைப்படுத்த முடியும்? இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் கிடையாது, பொருளாதாரத்தின் நிலையை அடிப்படையாகக் கொண்டதும் கிடையாது என்பதை மத்திய அரசு ஏற்காதது ஏன்?
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியும், மற்றொரு நீதிபதியும்கூட, "பிற்படுத்தப்பட்டவர்களைத் தவிர்ப்பது, அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகும். சாதி, வர்க்க வேறுபாடின்றி எல்லா ஏழைகளும் சமமானவர்கள்தான்" என்று தெரிவித்துள்ளனர். எனினும், மற்ற 3 நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, மாதம் ரூ.60 ஆயிரத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களை, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று கூறுவது ஏற்புடையதா? பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டவர்கள், மற்றவர்கள்போல சமமாக வாழ முடியாதவர்கள், ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு கல்வி, வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று, பல ஆண்டுகளாகப் போராடிப்பெற்றதே இடஒதுக்கீட்டுக் கொள்கை. அதை நீர்த்துப் போகச் செய்யவே, இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்னும் என்னவெல்லாம் திட்டம் உள்ளதோ?
பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடனுதவி போன்ற பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தலாமே தவிர, இடஒதுக்கீடு வழங்குவது கேலிக்குரியது. இந்த விவகாரம் தொடர்பாக, 8.7.2019 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நம் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் இத்தகைய இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு மற்றும் இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கத்திற்கு எதிரானது என்று மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாட்டை உறுதிபட வலியுறுத்திப் பேசினார்(அன்றைய தினமே, இதுகுறித்து அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது) என்பது நினைவுகூரத்தக்கது.
சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்ட, இன்னும் வேகமான போராட்டங்களை நடத்த வேண்டும் என்பதையே இதுபோன்ற தீர்ப்புகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, எல்லோரும் இணைந்து குரல்கொடுக்க முன்வரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இதற்கான முன்னெடுப்புகளில் அனைத்து கட்சியினருடனும் மக்கள் நீதி மய்யம் தோளோடு தோள் நிற்கும்!"
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.