< Back
மாநில செய்திகள்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம்:  வேங்கைவயல் கிராமத்தில் சமூக நீதி கண்காணிப்பு குழு  ஆய்வு
மாநில செய்திகள்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம்: வேங்கைவயல் கிராமத்தில் சமூக நீதி கண்காணிப்பு குழு ஆய்வு

தினத்தந்தி
|
13 Jan 2023 10:26 AM GMT

வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கொண்ட சமூக நீதி கண்காணிப்பு குழு கிராமத்தில் ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்தனர். இதில், சமூக நீதி கண்காணிப்பு துணை குழுவைச் சேர்ந்த முனைவர் சாமிநாதன், ராஜேந்திரன், கருணாநிதி மற்றும் மருத்துவர் சாந்தி ரவீந்திரன் உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழுவினர் இன்று சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.

இதையடுத்து விசாரணையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் நடந்த விபரங்களை கேட்டறிந்தனர்.

இதன் பின்னர் வெள்ளலூர் காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்தக் குழுவைச் சேர்ந்த சாமிநாதன் கூறியதாவது:-

இறையூர் கிராமத்தில் ஜாதிய வன்கொடுமைகள் இருந்ததன் வெளிப்பாடாகத்தான் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் இக்கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் வழிபடுவதில் ஜாதிய பாகுபாடு இருந்துள்ளது, இரட்டை குவளை முறை நடைமுறையில் இருந்துள்ளது, அவையெல்லாம் இந்த கிராமத்தில் தீண்டாமை இருந்துள்ளது என்பதை உறுதி செய்கிறது.

மனித சமூகத்தில் இதுபோன்ற செயல் நடைபெறக் கூடாது என்பதே ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக உள்ளது, இந்த செயலை யார் செய்தது என்பதை கண்டறிய புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது, குற்றவாளிகள் இறுதி செய்யப்பட்டு விட்டார்கள் என்று வரும் செய்திகள் வதந்தி மட்டுமே, இதில் ஆதாரப்பூர்வமாக குற்றவாளியை நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது.

இந்த விவகாரத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது, போலீசார் மீது குற்றம் சுமத்த முடியாது. அவர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இந்த விவகாரத்தில் எங்களது ஆய்வு முடிந்த பின்பு கலெக்டரோடு கலந்து ஆலோசனை செய்த பிறகு அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்,

இது போன்ற நிகழ்வுகள் இனி வேறு மற்ற பகுதியில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அதேபோல பொது மயானம் பொது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எல்லா கிராமங்களிலும் அமைய வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம் அது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்