சமூக நீதி, சமத்துவம் என்பதே திராவிட மாடல் - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
|‘சமூக நீதி, சமத்துவம் என்பதே திராவிட மாடல்’ என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
சனாதன எதிர்ப்பு மாநாடு
திராவிடர் கழகம் சார்பில் திருவாரூரில், சனாதன எதிர்ப்பு மற்றும் திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
சனாதனம் என்பது ஆரிய மாடல். சனாதனம் என்பது இன்னாருக்கு இதுதான் என்கிற மனு தர்மம். திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்கிற சமத்துவம். சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி என்ற அம்பேத்கர் கொண்டு வந்த அரசியல் சட்ட அமைப்பினை மாற்ற முயல்வது தான் சனாதனமாகும். பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள், அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் என தி.மு.க. அரசு அறிவித்தது.
திராவிட மாடல்
சமூக நீதி, சமத்துவம் என்பதே திராவிட மாடல். இந்த தத்துவத்தை பாதுகாப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம். அதனால் சனாதனத்திற்கு எதிரி இந்திய அரசியல் சட்டம் தான். சனாதன எதிர்ப்பு என்பது மனிதநேய ஆதரவு, வளர்ச்சி என்ற அர்த்தமாகும்.
திராவிட, சுயமரியாதை, பகுத்தறிவு தத்துவங்கள் முழுக்க சமூக விஞ்ஞான தத்துவங்களாகும். திருவாரூரில், ஒடாத ஆழித்தேரை ஒட்டியவர் கருணாநிதி. எனவே திருவாரூர் தெற்கு வீதிக்கு கலைஞர் வீதி என பெயர் சூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சாதிக்கும் ஆற்றல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாளவன் பேசும்போது,
தமிழகத்தையும், கேரளாவையும் குறி வைக்கும் சனாதன சக்திகள் விரட்டி அடிக்கப்பட வேண்டும். எதையும் சாதிக்கும் ஆற்றல் திராவிடர் கழகத்திற்கும், தி.மு.கவிற்கும் உண்டு. தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் கருணாநிதி தான் காரணம். தனது 13 வயதில் இந்தியை எதிர்த்து குரல் கொடுத்து போராடிய வீதி திருவாரூர் தெற்கு வீதி, அந்த வீதிக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் வீதி என பெயர் சூட்ட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன், ம.தி.மு.க. அரசியல் ஆய்வுமைய செயலாளர் செந்திலதிபன், முன்னாள் அமைச்சர் மதிவாணன், நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் துரைவேலன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார், திருவாரூர் நகர செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திராவிடர் கழக மாவட்ட தலைவர் மோகன் வரவேற்றார்.
முடிவில் செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.