அரியலூர்
உயிருக்கு போராடிய திருநங்கையை மருத்துவமனையில் சேர்த்த சமூக ஆர்வலர்கள்
|உயிருக்கு போராடிய திருநங்கையை சமூக ஆர்வலர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு எதிரே வெயிலில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடல் மெலிந்து எழுந்திருக்க முடியாமல் ஈக்கள் மொய்த்த நிலையில், நாவறண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர் சண்முகம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவருக்கு தண்ணீரை குடிக்க கொடுத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா மேலபூவாணி குப்பம் கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் ராஜசேகர் என்ற திருநங்கை என்பதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயங்கொண்டம் பகுதிக்கு வந்தவர் உடல்நலக்குறைவு காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றார். அப்போது அவரது உடல் மிகவும் மோசமாக இருப்பதால் இங்கேயே சிகிச்சையில் இருக்குமாறு டாக்டர்கள் கூறி இருக்கின்றனர். ஆனால், அவர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றிருக்கிறார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவர், மேற்கொண்டு செல்ல முடியாமல் மருத்துவமனைக்கு எதிரே இருந்த வெட்ட வெளியில் மழை மற்றும் வெயிலில் 3 நாட்களுக்கும் மேலாக உணவு சாப்பிடாமல் படுத்துக்கிடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயங்கொண்டம் போலீசார் அவரது உறவினர்களுக்கு குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையம் மூலம் தகவலை தெரிவித்தனர்.