தஞ்சாவூர்
கத்தியை காட்டி மிரட்டி காண்டிராக்டரிடம் ரூ.10 ஆயிரம், செல்போன் வழிப்பறி
|தஞ்சையில் கத்தியை காட்டி மிரட்டி காண்டிராக்டரிடம் செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சையில் கத்தியை காட்டி மிரட்டி காண்டிராக்டரிடம் செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காண்டிராக்டர்
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சண்முகாநகரை சேர்ந்தவர் ராமச்சந்திர மூர்த்தி. இவருடைய மகன் ஞானசேகரன் (வயது 44). இவர் பெயிண்டிங் காண்ட்ராக்டராக உள்ளார். இவர் நேற்றுமுன்தினம் மாலை நாஞ்சிக்கோட்டை சாலை பர்வீன் தியேட்டர் பஸ் நிறுத்தம் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஞானசேகரனை வழி மறித்து நிறுத்தினர். திடீரென அவர்கள் ஞானசேகரனின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டினர். மேலும் அவருடைய பாக்கெட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்து 400 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு வேகமாக சென்று விட்டனர்.
போலீசில் புகார்
இது குறித்து ஞானசேகரன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.