< Back
மாநில செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட பாம்புகள் மற்றும் பல்லிகள் பறிமுதல்...!
மாநில செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட பாம்புகள் மற்றும் பல்லிகள் பறிமுதல்...!

தினத்தந்தி
|
30 July 2023 12:29 PM IST

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை பாம்புகள் மற்றும் 2 பல்லிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி,

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம், அரிய வகை உயிரினங்களை கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10:30 மணியளவில் மலேசியாவில் இருந்து விமானம் ஒன்று திருச்சிக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன் என்ற பயணி கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தபோது அதில் ஏதோ நகர்வது போன்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனையின்போது மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை பாம்புகள் மற்றும் 2 பல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகள் மற்றும் பல்லிகளை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பாம்புகள் மற்றும் பல்லிகளை கடத்தி வந்த முகமது மொய்தீனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் செய்திகள்