கன்னியாகுமரி
நாகர்கோவிலில் வனத்துறையினருக்கு பாம்பு பிடிக்க பயிற்சி
|நாகர்கோவிலில் வனத்துறையினருக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சியை மாவட்ட வனஅதிகாரி இளையராஜா தொடங்கி வைத்தார்.
குமரி மாவட்ட மாவட்ட வனத்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் பாம்பு பிடிப்பது குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாைம மாவட்ட வனஅதிகாரி இளையராஜா தொடங்கி வைத்தார். அப்போது வனப்பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் உள்ள பாம்புகளை எப்படி பாதிப்பு இல்லாமல் பிடிப்பது, அதனையும் மீறி பாம்பு கடித்தால் உடனே செய்ய வேண்டிய முதலுதவி குறித்து வன உயிரினகட்டளை சார்பில் வன ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. வன பயிற்சியாளர் வித்யாதர் பயிற்சி அளித்தார். அப்போது பாம்புகளை உபகரணங்களை கொண்டு பிடிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்காக சாரைப்பாம்பு, மலைப்பாம்பு மற்றும் நல்ல பாம்பு ஆகியவற்றை பயன்படுத்தப்பட்டு, வன ஊழியர்களுக்கு செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் மற்றும் வனச்சரக பணியாளர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.