விழுப்புரம்
விழுப்புரம் அருகே சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தல் ஒருவர் கைது
|விழுப்புரம் அருகே சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் நேற்று காலை ஆலத்தூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த வாகனத்தினுள் 50 கிலோ எடை கொண்ட 67 சாக்கு மூட்டைகளில் 3,350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒருவர் கைது
பின்னர் அந்த சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த முபாரக் (வயது 50) என்பதும், இவர் ஆலத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து முபாரக்கை விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் தாலுகா போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து, முபாரக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.