கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகேமினிலாரியில் 1½ டன் ரேஷன் அரிசி கடத்தல்வாலிபர் கைது
|கள்ளக்குறிச்சி அருகே மினிலாரியில் 1½ டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
கள்ளக்குறிச்சி குடிமை பொருள் பாதுகாப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, ஆறுமுகம் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் கைகாட்டி அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினிலாரியை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் மினிலாரியை ஓட்டி வந்தவர் போலீசாரை பார்த்ததும் நிற்காமல் சென்றார்.
ரேஷன் அரிசி கடத்தல்
இதனால் உஷாரான போலீசார், அந்த மினிலாரியை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் சாக்கு முட்டையில் 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், மினிலாரியை ஓட்டிவந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தியாகதுருகம் அடுத்த வடதொரசலூரை சேர்ந்த லட்சுமணன் மகன் மணிகண்டன் (வயது 28) என்பதும், எலவனாசூர்கோட்டை, வெள்ளையூர், புதூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூரை சேர்ந்த முத்துசாமி மகன் கார்த்திக் என்பவரிடம் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மினிலாரியில் கடத்திச் சென்றபோது பிடிபட்டது தெரியவந்தது.
வாலிபர் கைது
அதைத்தொடர்ந்து போலீசார், மணிகண்டனை கைது செய்ததுடன், ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி தச்சூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கார்த்திக் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.