< Back
மாநில செய்திகள்
லாரியில் 15 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
மதுரை
மாநில செய்திகள்

லாரியில் 15 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது

தினத்தந்தி
|
12 Sept 2022 1:12 AM IST

திருமங்கலம் அருகே லாரியில் 15 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது. இதை அறிந்த அதிகாரிகள் ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த 2 பேரை கைது செய்தனர்.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே லாரியில் 15 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது. இதை அறிந்த அதிகாரிகள் ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த 2 பேரை கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. ஒரு சிலர் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ரேஷன் அரிசிகளை பணம் கொடுத்து வாங்கி அதை பாலீஷ் செய்து வெளிமாநிலத்துக்கும், கறிக்கோழி தீவனத்துக்கும் அனுப்பி வைக்கிறார்கள். சிலர் ரேஷன் அரிசியை மாவாக்கி அதை விற்பனை செய்கிறார்கள். இதை குடிமை பொருள் அதிகாரிகளும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் அவ்வப்போது ஆய்வு நடத்தி ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருமங்கலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து விட்டது. உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் அவ்வப்போது சோதனை நடத்தி ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து வருகின்றனர்.

பறிமுதல்

இந்த நிலையில் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து கேரளாவுக்கு சென்ற ஒரு லாரியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் லாரிக்குள் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ எடையில் 300 மூடைகளில் மொத்தம் 15 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து 15 டன் ரேஷன் அரிசியையும் லாரியையும் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் சோதனை நடத்துவதை அறிந்த கமுதியை சேர்ந்த அரிசி உரிமையாளர் சசிகுமார், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் வேலாயுதம் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். லாரி டிரைவர் வில்லியம்(வயது 45), கிளீனர் ஆஷேஷ்(30) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்