சென்னை
துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் சிக்கியது - விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் பிடிபட்டனர்
|துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு விமான நிலைய வருகை பகுதியில் இருந்து புறப்பாடு பகுதிக்கு செல்லக்கூடிய இடத்தில் கழிவறை ஒன்று உள்ளது. இங்கு விமான நிலைய தனியார் நிறுவன ஊழியரான மணிவண்ணன் என்பவர் சென்று விட்டு நீண்ட நேரத்திற்கு பின் வெளியே வருவதை கவனித்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார் அவரை மடக்கி விசாரித்தனர்.
அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்து அவரது சோதனை செய்ததில், அவரது உள்ளாடைக்குள் 8 பாக்கெட்டுகளில் சுமார் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 750 கிராம் அளவிலான தங்கம் கோந்து வடிவில் மறைத்து கடத்தி வந்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கையை சேர்ந்த ரிபாஸ், இன்ஜமாம் ஆகிய 2 பேர் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து சென்னை விமான நிலைய கழிவறையில் விமான நிலைய ஊழியர் மணிவண்ணனிடம் தந்த விட்டு கொழும்பிற்கு தப்பி செல்ல இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் தங்கத்தை கடத்தி வந்த இலங்கை வாலிபர்கள் இன்சமாம், ரியாஸ் மற்றும் கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியர் மணிவண்ணன் ஆகிய 3 பேரையும் மேல் நடவடிக்கைக்காக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலை கண்டு பிடித்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினார்.