சென்னை
புழல் சிறையில் கைதியாக உள்ள அண்ணனுக்கு கஞ்சா கடத்திய இளம்பெண் மீது வழக்குப்பதிவு
|புழல் சிறையில் கைதியாக உள்ள அண்ணனுக்கு கஞ்சா கடத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா கடத்தல்
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் செல்வா (வயது 26). இவர், கஞ்சா வழக்கில் கடந்த ஜூலை மாதம் கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக அவருடைய தங்கை மீனாலட்சுமி (24) நேற்று முன்தினம் மாலை துணிகளுடன் புழல் சிறைக்கு வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சிறை போலீசார், மீனாலட்சுமி கொண்டு வந்த துணிகளை சோதனை செய்தனர். அதில் இருந்த ஜீன்ஸ் பேண்ட்டில் 10 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுபற்றி புழல் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறையில் கைதியாக உள்ள அண்ணனுக்கு கஞ்சா கடத்தி வந்த மீனா லட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செல்போன் பறிமுதல்
புழல் விசாரணை சிறையில் நேற்று முன்தினம் இரவு 20-க்கும் மேற்பட்ட சிறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசாரணை சிறையில் ஒரு அறையின் அருகே உள்ள மரத்தின் கீழ் பாலித்தீன் பையில் சுற்றி வைக்கப்பட்ட செல்போன் ஒன்றை கண்டெடுத்தனர்.
அதனை பறிமுதல் செய்த போலீசார், இதுபற்றி புழல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த செல்போனை எந்த கைதி பயன்படுத்தினார்?. சிறையில் உள்ள கைதிக்கு செல்போன் கிடைத்தது எப்படி? என விசாரித்து வருகின்றனர்.