தேனி
கூரியர் தபாலில் கடத்தி வந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல்; வாலிபர் கைது
|கூடலூர் அருகே கூரியா் தபாலில் லாட்டரி சீட்டுகள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் குமுளி பகுதியில் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சிலர் மொத்தமாக விலைக்கு வாங்கி வந்து தமிழகத்திற்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் லோயர்கேம்ப் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், தனிப்பிரிவு போலீஸ் செல்லமணி மற்றும் போலீசார் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மாதா கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார்சைக்கிளில் கூரியர் தபாலுடன் ஒருவர் வந்தார். விசாரணை நடத்தியதில் அவர், தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் (வயது 35) என்பதும், கூரியர் தபாலில் லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 780 மதிப்புள்ள 3,511 லாட்டரி சீட்டுகள் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.