< Back
மாநில செய்திகள்
தமிழக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
5 Sep 2022 4:44 PM GMT

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 4 ஆண்டுகளில் ரூ.150 கோடி செலவில் தலா ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கல்லூரிக்கு கட்டிடங்கள்

சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கிவைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

76 ஆண்டுகளைக் கடந்துள்ள பாரதி மகளிர் கல்லூரியில் ஒரு சில கட்டிடங்கள் பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. ரூ.25 கோடி மதிப்பீட்டில் 33 வகுப்பறைகள், 7 ஆய்வகங்கள், 2 நூலகங்கள் மற்றும் 3 ஆசிரியர் அறைகள் கொண்ட தரைத்தளத்துடன் கூடிய 3 அடுக்கு கட்டிடம் கட்ட ஆணையிட்டிருக்கிறேன். விரைவில் அந்த கட்டிடம் உங்களுடைய பயன்பாட்டுக்கு வரும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், உயர்ந்த சாதி, தாழ்த்தப்பட்ட சாதி, கிராமம், நகரம் என்ற வேறுபாடும், மாறுபாடும் இல்லாமல் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி உருவானது. இடஒதுக்கீட்டை உருவாக்கி பள்ளிகளையும் உருவாக்கியது நீதிக்கட்சிதான். அந்த சமூகநீதியை, அரசியல்ரீதியாக காப்பாற்றியவர் பெரியார். ஆட்சி ரீதியாக அதைக் காப்பாற்றியவர்கள் காமராஜர், அண்ணா, கருணாநிதியாகும். அவர்களது வழித்தடத்தில் இந்த திராவிட மாடல் அரசு அமைந்துள்ளது.

தடை உடைப்பு

பல்லாயிரக்கணக்கான பெண்கள் இந்த கல்லூரியில் படிக்கிறீர்கள் என்றால் அது திராவிட இயக்கத்தின் பெண்ணுரிமைப் போராட்டங்களால் விளைந்த பயன். 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, 1989-ம் ஆண்டு சட்டசபையில், பெண்களுக்கு சொத்தில் சமவுரிமை வழங்கும் திட்டமாக கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றி தந்தவர் கருணாநிதி.

பள்ளியில் படிக்கும் மகளிருக்கு கல்லூரிக்கு வர தடையும், தயக்கமும் இருக்கிறது. அதை உடைப்பதற்குத்தான் இந்த புதுமைப் பெண் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.

மகளிருக்கு இலவச பஸ் பயண வசதியால் மாதந்தோறும் ரூ.600 முதல் ரூ.1,200 வரை செலவு மிச்சம் ஆகிறது. இதனால் அரசுக்கு எத்தனை கோடி இழப்பு என்பதை பேசாமல், எத்தனை லட்சம் பெண்கள் சிறப்பு அடைகிறார்கள் என்பதையே பேசுகிறேன். அதே எண்ணத்தில் இந்த புதுமைப் பெண் திட்டத்தையும் உருவாக்கி இருக்கிறோம். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் என்று இதற்கு பெயர். பெண்களின் உரிமைகளுக்கு பெரியாருடன் இணைந்து குரல் கொடுத்த பெண் சிங்கம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

ஸ்மார்ட் வகுப்புகள்

ஆயிரம் ரூபாயை மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவதாக அரசு கருதவில்லை. அப்படி வழங்குவது அரசின் கடமை. பள்ளியுடன் படிப்பை நிறுத்திவிடும் பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். இதன் மூலமாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும். குழந்தைத் திருமணங்கள் குறையும். பெண்கள் அதிகாரம் பெறுவார்கள். நமது ஆட்சியினுடைய மையக் கருத்து இதுதான்.

மாதிரி பள்ளிகளையும், தகைசால் பள்ளிகளையும், தனியார் பள்ளிகளில்தான் ஸ்மார்ட் வகுப்புகள் இருக்குமா? அரசு பள்ளிகளிலும் அதை உருவாக்குவோம் என்ற நோக்கத்துடன் உருவாக்கி இருக்கிறோம். அனைவருக்கும் ஒரே மாதிரி கல்விதான் நம்முடைய நோக்கம். மாதிரி பள்ளிகள், தகைசால் பள்ளிகள் உருவாக்கப்பட இருக்கின்றன. முதல்கட்டமாக ரூ.171 கோடி மதிப்பீட்டில் 25 மாநகராட்சிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

இப்பள்ளியினுடைய கட்டிடங்கள் நவீனமயமாக்கப்படும். கற்றல் செயல்பாடுகளுடன் சேர்த்து கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், விளையாட்டு ஆகிய அனைத்து திறமைகளும் மாணவர்களுக்கு உருவாக்கப்படும். அதாவது மாணவர்களின் பல்துறைத் திறன் வெளிக்கொண்டு வரப்படும். இவை அனைத்து மாவட்டங்களுக்கும் அடுத்தடுத்து விரிவுபடுத்தப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் அடுத்து வரும் 4 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும். பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட இருக்கின்றன.

ஒரு தந்தைக்குரிய கடமை உணர்வோடு உங்களிடம் பேசுகிறேன். நீங்கள் அனைவரும் நன்கு படியுங்கள். ஒரு பட்டத்தோடு நிறுத்தாமல் உயர்கல்வியைப் படியுங்கள். தகுதியுள்ள வேலைவாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்