ஸ்மார்ட் சிட்டி முறைகேடு: 200 பக்க விசாரணை அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
|கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை உள்பட 11 மாநகரங்களில் மேற்கொள்ளப்பட்ட 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் முறைகேடு நடந்தது தொடர் பான 200 பக்க விசாரணை அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் என்ற நகரங்களை மேம்படுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்தது.
சென்னை உள்பட 11 மாநகரங்கள்
முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 100 நகரங்களை 'ஸ்மார்ட் சிட்டி'களாக மாற்ற திட்டமிடப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம், தஞ்சை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய11 மாநகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கான அரசாணையும் முறையாக பிறப்பிக்கப்பட்டது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கான செலவில் 50 சதவீதம் மத்திய அரசும், 50 சதவீதம் மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன. அதன்படி ரூ.10 ஆயிரத்து 651 கோடி மதிப்புள்ள 644 பணிகளில் ரூ.2 ஆயிரத்து 327 கோடி செலவில் 257 பணிகள் முடிக்கப்பட்டன. ரூ.7 ஆயிரத்து 947 கோடி மதிப்புள்ள 399 பணிகள் நடைமுறையில் உள்ளன. ரூ.154 கோடி மதிப்புள்ள 10 பணிகள், டெண்டர் நடவடிக்கைகளில் உள்ளன. சில பணிகள் டெண்டர் நிலையிலும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு நிலையிலும்உள்ளன.
அ.தி.மு.க. ஆட்சியில் முறைகேடு
இதில் சென்னை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.490 கோடியும், தமிழக அரசு ரூ.500 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்தது. இதேபோல் மீதம் உள்ள 10 மாநகரங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி அ.தி.மு.க. ஆட்சியில் பணிகள் நடந்தன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்தநிலையில், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் திட்டத்தை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் பெய்த மழையில் சென்னை தியாகராய நகரில் மழைநீர் தேங்கி நின்றது. சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நின்றது.
ஒரு நபர் விசாரணை ஆணையம்
மழைநீர் பாதிப்பை நேரில் பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நிறைய முறைகேடு நடைபெற்றுள்ளன, இதை விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்' என்று கூறியிருந்தார்.
அதன்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் கடந்த மே மாதம் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, 3 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது.
200 பக்க அறிக்கை
இதனையடுத்து ஆணையம் தனது விசாரணையை முடுக்கிவிட்டது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கான பணிகள் அதற்கான வழிகாட்டுதலுடன் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டதா?, இதற்காக மத்திய, மாநில அரசு அனுமதித்த மானியங்கள், வழிகாட்டு நெறிமுறைப்படி செலவழிக்கப்பட்டதா? திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கும்போது அதற்கான நடைமுறை பின்பற்றப்பட்டதா?, திட்ட அமலாக்கத்தில் ஏதாவது குறைகளை தணிக்கைத்துறை சுட்டிக்காட்டி உள்ளதா?, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?, தவறுகள் நடந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு? உள்பட பல்வேறு விவரங்களை ஒரு நபர் விசாரணை ஆணையம் சேகரித்தது.
இதனை அறிக்கையாக தயாரித்து, தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஒரு நபர் விசாரணை ஆணைய தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டேவிதார் வழங்கினார்.
பின்னர் அவர் கூறும் போது, 'ஸ்மார்ட் சிட்டி' ஊழல் தொடர்பாக பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டு, 200 பக்க அறிக்கை தயாரித்து முதல்-அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.