< Back
மாநில செய்திகள்
சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை

தினத்தந்தி
|
12 July 2023 12:33 AM IST

குமரி மாவட்டத்தில் தக்காளி விலை ஏற்றத்தை தொடர்ந்து சின்ன வெங்காயம் விலை கிேலா ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. இஞ்சி விலையும் எகிறியுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தக்காளி விலை ஏற்றத்தை தொடர்ந்து சின்ன வெங்காயம் விலை கிேலா ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. இஞ்சி விலையும் எகிறியுள்ளது.

விலை உயர்வு

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. காய்கறிகளை பொறுத்த வரை தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. சாதாரண நாட்களில் கிலோ ரூ.10-க்கு கூட விலை போகாத தக்காளி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.150-க்கு விற்பனை ஆனது. ஆனால் கடந்த 2 நாட்களாக தக்காளி விலை கட்டுக்குள் உள்ளது. அதாவது நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை ஆனது. ஆனால் இதுவுமே விலை அதிகம் தான் என்கிறார்கள்.

இந்த நிலையில் தக்காளிக்கு போட்டியாக சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சி ஆகியவை விலை ஏற்றம் கண்டுள்ளன. 'சின்ன வெங்காயத்தை உறித்தால் தான் கண்ணீர் வரும். ஆனால் தற்போது அதன் விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது' என்கிறார்கள் இல்லத்தரசிகள். ஏன் எனில் சாதாரண நாட்களில் 4 கிலோ ரூ.100-க்கு விற்கப்படும் சின்ன வெங்காயம் படிப்படியாக விலை உயர்ந்து நேற்று சந்தைகளில் ரூ.180-க்கு விற்பனை ஆனது. அதுவே கடைகளில் ரூ.200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரேஷன் கடையில் தக்காளி

இதே போல ஒரு கிலோ இஞ்சி 300 முதல் 320 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சி விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதிலும் ஏழை வீடுகளில் தக்காளி இல்லாமல் சமையல் நடக்கிறது. சின்ன வெங்காயத்துக்கு பதிலாக பெரிய வெங்காயத்தை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

இதுபற்றி நாகர்கோவில் வட்டவிளையை சேர்ந்த ஐபிராட்டியிடம் கேட்டபோது, "விலைவாசி உயர்வு எங்களை போன்ற சாதாரண மக்களை தான் நேரடியாக பாதிக்கிறது. தக்காளி விலை உயர்ந்ததால் அதை கடந்த சில நாட்களாகவே நான் வாங்கவில்லை. இப்போது சின்ன வெங்காயம் விலையும் உயர்ந்து விட்டது. சின்ன வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். தற்போது அதை பார்த்தாலே கண்ணீர் வருகிறது. இது கூடுதல் சுமையாக இருக்கிறது. இதனால் தினமும் சமையல் செய்வதே பெரிய வேலை ஆகிவிட்டது. சென்னையில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்கிறார்கள். இதை குமரி மாவட்டத்திலும் நடைமுறை படுத்த வேண்டும்'' என்றார்.

வியாபாரி கருத்து

இதுபோல் வடசேரி கனகமூலம் சந்தை காய்கறி வியாபாரி சந்தோஷ் கூறும்போது, "கனகமூலம் சந்தைக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து தக்காளி விற்பனைக்காக வருகிறது. தற்போது வரத்து மிகவும் குறைவாக இருக்கிறது. ஆண்டுதோறும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு இருக்க தான் செய்யும். ஆனால் அது சில நாட்களில் சரியாகிவிடும். இதே போல மிளகாய் விலை உயர்ந்தால் அது 2 நாட்களில் குறைந்துவிடும். தக்காளியும் அப்படித்தான். ஆனால் தற்போது 2 வாரங்களாகவே விலை உயர்வு நீடிக்கிறது. வரும் நாட்களில் காய்கறிகள் விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.

அதே சமயம் மற்ற காய்கறிகள் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது ரூ.140-க்கு விற்பனை ஆன பீன்ஸ் ரூ.110 ஆக குறைந்துள்ளது. ரூ.100-க்கு விற்பனையான கேரட் ரூ.80 ஆக குறைந்துள்ளது. பீட்ரூட், முருங்கைகாய், புடலங்காய், சுரக்காய் ஆகியவற்றின் விலையும் குறைந்திருக்கிறது.

மேலும் செய்திகள்