புதுக்கோட்டை
சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை
|புதுக்கோட்டையில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்பனையாகிறது.
சின்ன வெங்காயம்
சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து காணப்படுகிறது. அதிலும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டையிலும் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வெளி மார்க்கெட், சில்லரை கடைகளை ஒப்பிடுகையில் உழவர் சந்தையை பொறுத்தவரை சற்று விலை குறைந்து விற்கப்படுகிறது. தக்காளி வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.120 வரை விற்கப்படுகிறது. உழவர் சந்தையில் கிலோ ரூ.95-க்கு விற்பனையாகிறது.
இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக அதிகரித்து தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. உழவர்சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்றது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வெளி மார்க்கெட்டிலும், சில்லரை கடைகளிலும் இவற்றின் விலை சற்று கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
விலை விவரம்
புதுக்கோட்டை உழவர் சந்தையில் விற்பனையான காய்கறிகள் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:- கத்திரிக்காய் ரூ.80-க்கும், வெண்டைக்காய் ரூ.40-க்கும், புடலங்காய் ரூ.35-க்கும், பாகற்காய் ரூ.60-க்கும், சுரைக்காய் ரூ.15-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், முருங்கைக்காய் ரூ.50-க்கும், சேனைக்கிழங்கு ரூ.60-க்கும், சேப்பக்கிழங்கு ரூ.80-க்கும், கருணைக்கிழங்கு ரூ.70-க்கும், பெரிய வெங்காயம் ரூ.30-க்கும், உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், பீட்ரூட் ரூ.52-க்கும், பீன்ஸ் ரூ.120-க்கும், முட்டைக்கோஸ் ரூ.35-க்கும், இஞ்சி கிலோ ரூ.300-க்கும், பூண்டு ரூ.100-க்கும் விற்பனையானது.