திருச்சி
வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை உயர்வு
|வரத்து குறைந்ததால் திருச்சியில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.
வரத்து குறைந்ததால் திருச்சியில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.
சின்னவெங்காயம் விலை உயர்வு
திருச்சி வெங்காய மண்டி மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் நாமக்கல், பெரம்பலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக வருகிறது. இங்கிருந்து திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறு வியாபாரிகள் விற்பனைக்காக வெங்காயத்தை வாங்கி செல்கிறார்கள். வழக்கமாக திருச்சி மார்க்கெட்டுக்கு தினமும் 250 டன் முதல் 300 டன் வரை சின்னவெங்காயம் விற்பனைக்காக வரும்.
ஆனால் தற்போது வெறும் 50 முதல் 60 டன் அளவுக்கு மட்டுமே வெங்காயம் வரத்து இருக்கிறது. வரத்து குறைந்துள்ளதால் வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது மொத்த விற்பனை விலையில் சின்ன வெங்காயம் முதல்தரம் கிலோ ரூ.80-க்கும், 2-ம் தரம் ரூ.70-க்கும் விற்கப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் மேலும் கிலோவுக்கு ரூ.10 கூடுதலாக ஒரு கிலோ ரூ.90 வரை விற்கப்படுகிறது.
பெரிய வெங்காயம் கிலோ ரூ.20
அதேநேரம் மராட்டிய மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக 200 டன் அளவுக்கு வரும் பெரியவெங்காயம், தற்போது வரத்து அதிகரித்து 400 டன் அளவுக்கு வருகிறது. இதனால் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. மொத்த விற்பனையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. சில்லறையில் கிலோ ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்கப்படுகிறது.
இது குறித்து வெங்காயமண்டி வியாபாரிகள் சங்க செயலாளர் தங்கராஜ் கூறுகையில், "கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் திருச்சி மார்க்கெட்டுக்கு அதிகஅளவு சின்னவெங்காயம் வரத்து இருக்கும். ஆனால் தற்போது அங்கு மழை பெய்து வருவதால் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்பு உள்ளது.
அதேநேரம் பெரியவெங்காயம் விலை குறைந்துள்ளது. இதனால் சின்னவெங்காயத்தை தேவைக்கேற்ப வாங்கி கொண்டு, பெரிய வெங்காயத்தை தாராளமாக பயன்படுத்தலாம். இன்னும் ஒரு மாதத்தில் தமிழக மாவட்டங்களில் இருந்து சரக்குகள் வர தொடங்கும். அதனால் சின்னவெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்துவிடும்" என்றார்.