கிருஷ்ணகிரி
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டம்
|மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஓசூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
ஓசூர்:-
மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஓசூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
மின்கட்டண உயர்வு
தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு மின்கட்டண உயர்வை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உற்பத்தியை நிறுத்தி மாநிலம் தழுவிய அளவில் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தொழில் முனைவோர் அமைப்புகள் முடிவு செய்தது.
கதவடைப்பு போராட்டம்
அதன்படி, நேற்று மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் சங்கங்களின் அமைப்புகளான கோவையின் கொடிசியா, மதுரையின் மடிசியா மற்றும் ஓசூரில் உள்ள ஹோஸ்டியா மற்றும் ஹோஸ்மியா உள்ளிட்டஅமைப்புகள் சார்பில் கதவடைப்பு போராட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை பொறுத்தவரையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இந்த கதவடைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால் தொழிற்பேட்டை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக, சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டதால் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.