சென்னையில் நாளை முதல் கழிவுநீர் குழாயில் கசடு அகற்றம் - சென்னை குடிநீர் வாரியம் தகவல்
|சென்னையில் கழிவுநீர் செல்லும் குழாய்களில் தூர்வாரும் பணி மீண்டும் நாளை முதல் தொடங்க உள்ளது.
சென்னை,
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் சென்னையில் கழிவுநீர் செல்லும் குழாய்களில் தூர்வாரும் பணி மீண்டும் நாளை (1-ந் தேதி) முதல் தொடங்க உள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழையையொட்டி பகுதி 1 முதல் 15 வரை உள்ள தெருக்களில் கழிவு நீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நாளை 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
2106 தெருக்களில் 282 தூர்வாரும் எந்திரங்கள், 162 ஜெட்ராடிங் எந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்கள் என மொத்தம் 501 கழிவுநீர் எந்திரங்கள் மூலம் பெருமளவில் கழிவு நீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரப்படுகிறது.
எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகத்திலும் பணிமனை அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.